ஊனுக்கு ஊனிட்ட வேடவன்


கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் கோதாமெனாமல் அமுது செய் வேதாகம் ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே’  (ஆசார ஈனன் அறிவிலி - திருப்புகழ்) அருணகிரிநாதர், ஆசார ஈனன் என்று தொடங்கும் திருப்புகழ் பாடலின் மேற்கண்ட வரிகளில்  சிவபிரானின் திருவிளையாடலைக் கூறிவிட்டு, அவருடைய மகன் முருகனை வணங்குகிறார். கூசாது வேடன் உமிழ்தரு - யார் அந்த வேடன்? எதை, யாருக்காக உமிழ்ந்தான்? திருமுறைப் பாடல்களில்  பல இடங்களில் குறிப்பிட்டிருக்கும் அந்த வேடன் யார்? 

பக்தி முற்றிய சிவனடியார்களுக்கு சிவபிரானது உண்மையை நினைக்குந்தோறும், கேட்குந்தோறும், காணுந்தோறும் என்னவாகும்? தன்வசம் அழிதலும், மயிர்க்கால்தோறும் திவலை உண்டாகப் புளகிதமடைதலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரை தடுமாறலும், ஆடுதலும், பாடுதலும், அந்தச் சிவன் உவப்பன செய்தலும், அவன் வெறுப்பன ஒழித்தலும், இவைபோன்ற பிறவும் காணப்படும். இவ்வாறு அன்பானது  தலையன்பு, இடையன்பு, கடையன்பு என மூவகைப்படும். இத்துணை சிறப்புவாய்ந்த அன்புடைமையிலே சிறந்து விளங்கினார் ஒரு வேடன். அவர்தான் கண்ணப்ப நாயனார். இவர் முற்பிறவியில் பாண்டவர் ஐவருள் ஒருவரான அா்ச்சுனன் (நரரிஷியின் அவதாரம்) ஆவார். 

பாசுபதாஸ்திரம் வேண்டி, பெருந்தவம் செய்த அா்ச்சுனனோடு, வேடுவராய் வந்த சிவபெருமான் விற்போர் செய்ய, அா்ச்சுனனின் வில்லால் தலையில் சுவடு தங்கும்படி அடிபட்டார். பிற்பாடு தன் திருவுருவைக் காட்ட, அா்ச்சுனனும் மெய்மறந்து நின்று, பின் வணங்கி, தனக்கு முத்தி தருமாறு வேண்டினான். உடனே சிவனாரும், ‘‘நீ பகைவர்களை அழிக்கும் பொருட்டுத்தானே பாசுபதாஸ்திரம் வேண்டித் தவம் செய்தாய்! இப்பொழுது அதைப் பெறுவாயாக, உன் எண்ணம் ஈடேறும்’’ என்று கூறிஆயுதத்தை அளித்தார். ‘‘நீ உன் அறியாமையினால் என்னை வேடன் என்று நினைத்து இகழ்ந்தாய். அதனால் அடுத்தப் பிறவியில் வேடுவராஜனாகப் பிறந்து, திருக்காளத்தி மலையை அடைந்து, அன்பினாலே எமை பூஜிப்பாயாக. அந்த நாளில் உமக்கு யாம் முத்தி  தருவோம்” என்று திருவாய் மலர்ந்தருளினார் - இது சீகாளத்தி புராணம் தரும் தகவல். 

‘தத்தையாம் தாய் தந்தை நாகனாம்
தம் பிறப்புப் 
பொத்தப்பி நாட்டு உடுப்பூர் வேடுவனாம்
- தித்திக்கும் 
திண்ணப்பனாம் சிறு பேர் செய் தவத்தால் 
காளத்திக்
கண்ணப்பனாய் நின்றான் காண்’  

- என்ற நக்கீரர் வாக்கிற்கு இணங்க, பொத்தப்பி நாட்டில், உடுப்பூரில் கள்ளும், வெந்த ஊனும் உண்பவர்களான அச்சம் அறியாத வேடர்களின் தலைவனாக நாகன் என்பவன், மனைவி தத்தையுடன் வாழ்ந்துவந்தான். இவர்களுக்கு முருகனருளால் திண்ணன் என்று ஒரு மகன். உரிய வயதை எட்டியதும், தன் தந்தையாரின் பொறுப்புகளை ஏற்ற திண்ணன், வில்லேந்தி வேட்டைக்குப்போக ஆரம்பித்தார். ஒருசமயம், யானைகளும் அஞ்சும்படி காட்டுப் பன்றி ஒன்று, மேகம் போன்ற தோற்றமும், இடிபோன்ற உறுமலும், கனல்பொழியும் கண்களும் கொண்டு, வலைகளை அறுத்துக்கொண்டு ஓடியது. வேடர்கள் அதைப் பின்பற்ற முடியாமல் திகைத்திருந்த தருவாயில் காடன், நாணன் எனும் இரு சகவேடர்களுடன் பன்றியைப் பின்பற்றி ஓடினார் திண்ணனார். 

வேடர்கள் விடும் அம்புகளையும், துரத்திவரும் நாய்களையும் ஏமாற்றிவிட்டு, அந்தப் பன்றி காற்றெனக் கடிது ஓடிக் களைத்து ஒரு மலையடிவாரத்தில் நின்றது. அதைக்கண்ட திண்ணனார் கரிகையை உருவி, அந்தப் பன்றியைக் குத்திக் கொன்றார். நாணனுக்கும், காடனுக்கும் தண்ணீர் தாகம் எடுத்ததால் மூவரும் அருகில் இருந்த தேக்க மரத்தைக் கடந்து சென்று, ஒரு குன்றருகில் குளிர்ந்த தண்ணீர் ஓடுகின்ற பொன்முகலி ஆற்றை அடைந்தனர். திண்ணனாரும் மகிழ்ந்து, பன்றியை நாடன், காடன் இருவரையும் தூக்கி வரச் செய்து, குடுமித்தேவர் குடிகொண்டிருக்கும் திருக்காளத்தி மலை நோக்கிச் சென்றார். “இந்த மலையைப் பார்த்தபடிச் செல்லச்செல்ல என்மேலுள்ள பாரம் கழிகிறதே! ஆசை மேலும் மேலும் பொங்குகிறது, ஆனால் இது வேறு ஏதோ ஆசையாக உள்ளத்தில் விழுகிறதே! 

குடுமித்தேவர் எங்கே இருக்கிறார்?’’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக நடந்தார் திண்ணப்பர். ஓரிடத்தில் யாவரும் முத்தும், சந்தனக்கட்டையும், அகிற்கட்டையும் ஒதுக்கப்பெற்றிருக்கும் பொன் முகலிப் பொழிலிலே பன்றியை வைத் துவிட்டு நின்றனர். “காடா, தீயை வளர்த்து இந்தப் பன்றியைக் காய்ச்சு. நாங்கள் இருவரும் இந்த மலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறோம்,’’ என்று கூறி நாணனை அழைத்துக் கொண்டு நதியைத் தாண்டி, கரை கடந்த மகிழ்ச்சியுடன் மலைச்சாரலை அடைந்தார் திண்ணப்பர். குடுமித்தேவரைக் காணுவதற்கு முன்பே இறைவனின் திருவருள் நோக்கம் பெற்றார் திண்ணப்பர். பிறப்பின் பழவினைத் தொடர்பை அகன்றார். 

குடுமித்தேவரைக் கண்ட மாத்திரத்திலே முன்னுள்ள குணங்கள் மாறி, சிவனிடம் பேரன்பு வைத்தவர் ஆனார். நெடுங்காலம் குழந்தையைப் பிரிந்திருந்து பின் அந்தக் குழந்தையைக் கண்ட தாயைப்போல விரைந்து ஓடி, தோள்கள் நெகிழும்படி அக்கடவுளைத் தழுவி முகர்ந்து முத்தமிட்டு, உடல் முழுதும் புளகாங்கிதம் அடைய, பெருமூச்சு விட்டு, கண்களினின்றும் நீர் பெருக, ‘‘இந்த சுவாமி அடியேனுக்கு அகப்பட்டது என்ன ஆச்சரியம்! ஐயகோ! புலியும், கரடியும் மற்ற விலங்குகளும் உலாவும் இந்தக் காட்டில் ஒரு வேடனைப் போல் தனியே இருக்கிறீரே! இந்தப் பச்சிலை களையெல்லாம் யார் உம் தலையில் வைத்தது?’’ என்று புலம்பியபடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்திய திண்ணனார், தான் ஏதாவது  இறைவனுக்குச் செய்ய வேண்டும் என்ற ஒரு உந்துதல் தன் மனதில் எழுவதை உணர்ந்தார். 

“அடடா, இறைவன் பசியால் வாடியிருப்பாரே! இவருக்குக் கொடுப்பவர் எவரும்  இல்லையே! இவர் தனியாய் வேறு இருக்கிறாரே! இவரைப் பிரியவும் முடியாது. இறைச்சியும் கொண்டுவரவேண்டும், நான் என் செய்வேன்?’’ என்று அங்கலாய்த்தார். பின்பு, இறைவனை விட்டுச் சென்றார், திரும்பினார். தழுவினார். அன்புடன் இறைவனை நோக்கியபடியே நின்றார். இறைவனைப் பிரிய மனமில்லாமல், காடன் இருக்குமிடம் ஓடிச்சென்று அவனிடம் விட்டுச் சென்ற பன்றியைத் தாமே தம் அம்பினால் தழலில் காய்ச்சிப் பதமாக இருக்கிறதா என்று கடித்துப் பார்த்து, இனிமையானதை மட்டும் தேக்கிலைத் தொன்னையிலே வைத்துக்கொண்டு, திருமஞ்சனமாட்டும் பொருட்டு, ஆற்றிலிருந்து நீரை வாயினால் முகந்து, பூக்களைக் கொய்து தன் தலையில் செருகி, பதைபதைத்து ஏங்கி ஓடிப்போய் கடவுளை அடைந்தார். 

அரனார் திருமுடி மேலிருந்த மலரை செருப்பணிந்த காலால் அகற்றினார். வாயிலிருந்த நீரை, மனதில் நிறைந்த அன்பை உமிழ்பவர்போலத் திருமுடிமேல் உமிழ்ந்து, தம் தலையில் செருகி வைத்திருந்த மலர்களை, இறைவன் திருமுடிமேல் சாற்றி, தேக்கிலையிலே கொண்டு வந்திருந்த இறைச்சியை இறைவன் திருமுன் வைத்து, ‘‘ஸ்வாமி, கொழுமையாகிய இறைச்சிகள் எல்லாவற்றையும் தெரிந்து, அம்பினாலே கோர்த்து, நெருப்பில் பதமாகக் காய்ச்சி, பல்லினால் அதுக்கி, நாவினால் சுவைபார்த்துத் தங்களுக்குப் படைக்கக் கொண்டுவந்திருக்கிறேன். 

இவ்விறைச்சி நன்றாக இருக்கிறது எம்பெருமானே! இதனை நீங்களும் அமுது செய்தருளும்!’’ என்று சொல்லி உண்பித்தார். இரவு வந்தது. விலங்குகள் அவருக்கு ஏதாவது கேடு விளைவிக்குமோ என அஞ்சி அங்கேயே வில், அம்புடன் இரவு முழுதும் காவல்காத்து, பின் வைகறையில் எழுந்து இறைச்சி கொண்டுவருவதற்காக வேட்டையாடப்போனார். அச்சமயத்தில் பொன்முகலி ஆற்றில் ஸ்நானம் செய்து, ஸ்வாமியை அர்ச்சிக்கும் பொருட்டு, திருமஞ்சனம், பத்ர புஷ்பங்களுடன் சிவநாமத்தை உச்சரித்தபடி அங்கு வந்த சிவாச்சாரியார், சிதறிக்கிடந்த இறைச்சியையும் மற்ற பொருட்களையும் கண்டு திடுக்கிட்டு, அழுது புரண்டு, ‘சிவ சிவா’ என அரற்றி, அவற்றைக் களைந்து, தான் கொண்டு வந்தவற்றை அணிவித்து, பூஜைசெய்து, பின் தபோவனம் சென்றார். 

அவர் சென்றபின் திண்ணப்பர் முந்தியவற்றைக் களைந்து, தான் கொண்டுவந்தவற்றை இறைவனுக்கு அணிவித்து, தான் கொண்டு வந்த நல்ல இறைச்சியைத் தேனில் தோய்த்துப் பெருமானுக்கு ஊட்டினார். இவ்வாறு ஐந்துநாட்கள், இரவு நேரத்தில் நித்திரை செய்யாது சுவாமிக்கு அருகே நின்றும், பகற்பொழுதில் மிருகங்களைக் கொன்று, இறைவனுக்கு இறைச்சி ஊட்டியும் தன் அன்பை வெளிப்படுத்தினார் திண்ணப்பர். இந்நிகழ்ச்சியைத் தெரிவிக்கும்வகையில் அருணகிரிநாதர் ‘வதன சரோருக’ என்று தொடங்கி ஒரு திருப்புகழ் பாடியுள்ளார்: ‘…இதவிய காண் இவை ததையென வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலாசலம் ஆடும் தூயவன்…’ இவ்வாறு அா்ச்சகரும், திண்ணப்பரும் மாறிமாறி இறைவன் பணியில் ஒன்றுபட்டு வரும் வேளையில் ஐந்தாம் நாள் இரவு சிவகோசரியாரின் கனவில் இறைவன் தோன்றி, ‘‘அன்பனே, நீ வழிபட்டுச் சென்றபின் வந்து வழிபடும் வேடனை, வெறும் வேடன் என்று எண்ணாதே! 

மனம், வாக்கு, செயலாலே அவன் அன்பை ஒரேநேரத்தில் வெளிப்படுத்துகிறான். அவனுடைய உருவம் நம்மிடம் வைத்த அன்பின் உருவம். அவன் அறிவு, நம்மை அறியும் அறிவு. அவனுடைய செயல் நமக்கு இனிய செயல். என்மேல் இருக்கும் பூக்களை எடுப்பதற்காக அவன் வைக்கும் செருப்படி, என் மைந்தன் முருகனின் காலினும் இன்பத்தை அளிக்கின்றது. அவன் வாயினின்றும் உமிழும் நீர், கங்கையைவிடப் புனிதம் நிறைந்தது. சுவைபார்த்துப் படைக்கும் இறைச்சியோ, யாகத்தில் படைக்கும் அவிசுக்கும் மேலான மதுரமாக இருக்கிறது. நம்முடைய சந்நிதானத்தில் அவன் நின்று சொல்லும் சொற்களானது, தேவர்களும், முனிவர்களும் கூறும் வேதத்தைவிட மேலானதாக உள்ளது. நீ நாளை வந்து ஒளிந்திருந்து பார். 

அவன் செயலை நாளைக்கு உமக்குக் காட்டுவோம்.’’ என்று கூறி அருளினார். மறுநாள் சிவகோசரியார் வழக்கம்போல் சிவபிரானுக்கு அா்ச்சனை செய்துவிட்டு, ஒரு மரத்தின் பின்சென்று என்ன நடக்கப்போகிறதோ என்ற பதைபதைப்புடன் மறைந்து நின்று பார்த்தார். தான் இறைச்சி கொண்டுவரும் சமயம், பல துர்க்குணங்களைச் சந்தித்ததால், இறைவனுக்கு என்ன நேர்ந்தது என மனம் கலங்கித் தவித்தார் திண்ணப்பர். குடுமித்தேவரை அடையும்பொழுது, இறைவனின் ஒரு கண்ணிலிருந்து  குருதி பெருகுவதைக் கண்டு திடுக்கிட்டார். செய்வதறியாது இங்கும் அங்கும் ஓடி, துடிதுடித்து மூலிகைச்சாறு தேடிவந்து பிழிந்தார். அப்படியும் குருதி நின்ற பாடில்லை. ‘ஊனுக்கு ஊன் இடல்வேண்டும்’ என்ற பழமொழி நினைவிற்கு வந்ததால், அம்பினால் தன் வலக்கண்ணைப் பிடுங்கி எடுத்து, குருதி வழியும் இறைவன் கண்ணில் அப்பினார்.

உதிரம் நின்றது. உடனே ஆனந்தக் கூத்தாடினார். ஆனால் திண்ணப்பனார் கொண்ட அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. இறைவனின் மறுகண்ணிலிருந்தும் உதிரம் வழிய ஆரம்பித்தது. அதுகண்டு திண்ணப்பனார் அச்சம் கொள்ளவில்லை. இப்போதுதான் அவருக்கு மருந்து கிட்டிவிட்டதே! “இன்னும் என் ஒருகண் இருக்கிறதே!’’ என்று கூறியபடியே தன் மற்றொரு கண்ணையும் பிடுங்கி அப்புவதற்காக, அதற்கு அடையாளம் அறிவதற்காக, செருப்பணிந்த தன் காலை குருதி வழியும் இறைவனின் கண்ணின்மேல் ஊன்றி வைத்து, அம்பினால் தன் கண்ணைத் தோண்ட விழைந்தபோது, எம்பெருமான் இதற்கு மேலும் சோதிக்க விரும்பாது, ‘‘நில்லு கண்ணப்பா, நில்லு கண்ணப்பா!’’ என்று கூறி லிங்கத்தினின்றும் வெளித்தோன்றித் தன் கையால் கண்ணப்பரின் கையைப் பற்றினார். 

அப்பொழுது வானிலிருந்து பூமாரியே சொரிய, வேத கோஷங்கள் முழங்கின. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிவகோசரியார், தான் வேடனை இழிவாக எண்ணினோமே என்று வெட்கி, இறைவனிடத்தில் அவனுக்கு இருக்கும் மெய்யன்பை உணர்ந்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இறைவன் இடக்கண் குருதி நின்றது. கண்ணப்பரின் வலக்கண் ஒளிபெற்றது! கண்ணப்பரின் கையைப் பற்றிய காளத்தியப்பர், ‘‘நிஷ்களங்க பக்தியையுடைய கண்ணப்பா! எப்போதும் நம் வலப்பக்கத்தில் நில்,’’ என்று கூறி, கண்ணப்பரைத் தம் பக்கத்தில் நிலைபெற்று இருக்கச்செய்தார். அருணகிரிநாதரும் மற்ற அருளாளர்களும் இந்நிகழ்ச்சியை விவரித்திருந்தாலும், திருமுறையில் அநேகப் பதிகங்களில் கண்ணப் பரைப் பற்றிய செய்தி வருகிறது. 

ஆறாம் திருமுறையில் அப்பர் ஒரு பாடலில் இந்நிகழ்ச்சியைக் குறிக்கிறார். வேண்டுகோளை உடைய வித்தியாதரர்கள் துதிக்க, சூரியன், அக்னி, விண்ணுலகத்தார் ஆகிய எல்லாப் பொருட்களையும் ஆக்கும் தந்தையாரும், அடியார்கள் மனத்துள் பொருந்தும் உயிர்களின் தலைவரும், பாசுபத வேடத்தையுடைய ஒளிவடிவினரும், கண்ணப்ப நாயனார் தம் வலக்கண்ணை இடந்து அப்பிய செயலைக் கண்டு உகந்தவரும் ஆகிய கழிப்பாலை மேவிய கபாலப்பனாராகிய சிவபெருமான் பலவகையான பிணிகளுக்கு இருப்பிடம்கொண்ட இந்நிலையற்ற உடல் நீங்குவதற்கு வழிவகுத்துள்ளார்.

இப்பொழுது பாடலைக் காண்போம்:
விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரான் எரிசுடரான் விண்ணு மாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.   
(ஆறாம் திருமுறை - திருக்கழிப்பாலை, ஆறாவது பாடல் ) 

Comments

Popular posts from this blog

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா