ராமனுக்கு உதவிய சூரிய புத்திரன்


ரட்சவிருதன் என்ற வானரவீரன் ஒருநாள் இமயமலைச் சாரலில் உள்ள குளத்தில் நீண்ட நேரமாக நீந்தி மகிழ்ந்தான், கரையேறியதும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானான். ஏனெனில் அந்தக் குளத்தில் நீராடும் ஆண்கள் அனைவரும் பெண்ணாக மாறும் சாபத்திற்கு ஆளாவதே அதற்குக் காரணம்.

அப்போது அவ்வழியாக வந்த இந்திரன், தனிமையில் இருந்த ரட்சவிருதப் பெண்ணைக் கண்டு மோகம் கொண்டான். அவர்களது சேர்க்கையால் வாலி என்னும் வானர வீரன் பிறந்தான். இந்திரன் புறப்பட்ட சிறிது நேரத்தில் சூரிய தேவன் குளக்கரைக்கு வந்தார். பெண்ணாக இருந்த ரட்சவிருதனைக் கண்டதும், அவரது ஞான திருஷ்டியில் எதிர்காலத்தில் ராம ராவண யுத்தம் நடக்கப்போவது தெரிந்தது.

ராமருக்கு பலமாக ஒரு வானர வீரனைத் தன் சக்தியால் தோற்றுவிக்க சூரியன் விரும்பினார். பெண் வடிவில் நின்ற ரட்சவிருதனிடம் சூரியனின் அம்சமாக மற்றொரு குழந்தை உண்டானது. அழகிய கழுத்தைக் கொண்ட அக்குழந்தைக்கு 'சுக்ரீவன்' எனப் பெயரிடப்பட்டது. 

அதன்பின் பிரம்மாவை நோக்கித் தவமிருந்த ரட்சவிருதன் மீண்டும் ஆணாக மாறினான். ரட்சவிருதனின் வயிற்றில் பிறந்த வாலி, சுக்ரீவன் இருவரும் சகோதர முறையில் வளர்ந்தனர். அவர்களே கிஷ்கிந்தை பகுதியில் ராம, லட்சுமணரைச் சந்திக்க நேர்ந்தது. இவர்களில் சூரிய புத்திரனான சுக்ரீவன் ராமருக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றார்.

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா