யானையால் விமோசனம் பெற்ற பல்லிகள்


ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் கௌதம முனிவரிடம் வித்தை பயின்றனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்குப் பழம், புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர். ஒருநாள் அவ்வாறு கொண்டு வந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்து விட்டது. இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டு வந்து கௌதம முனிவரிடம் கொடுக்க, முனிவர் அதைப் பெற்றுக் கொண்டபோது அதில் இருந்த பல்லி வெளியில் துள்ளி ஓடியது. இதைக் கண்டு கோபமுற்ற கௌதம முனிவர் அவர்களை பல்லியாகிவிடுமாறு சபித்துவிட்டார்.

இதனால் கவலை அடைந்த ஹேமன், சுக்லன் இருவரும் முனிவரின் பாதங்களில் விழுந்து, பாபவிமோசனமும் கோரினர். உடனே முனிவர் சாந்தமடைந்து, ‘‘இந்திரன் யானை வடிவம் கொண்டு (கஜேந்திரனாக) வரதராஜப் பெருமாளைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் வருவார்! அச்சமயம் நீங்கள் அங்கு சென்று வரதரை தரிசித்தால் உங்கள் சாபம் அகலும்!’’ என்று கூறினார்.

அதன்பின் அவ்விருவரும் இத்தலத்திற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிராகாரத்தில் மூலவரின் வடகிழக்கே பல்லிகளாக அமர்ந்தனர். குறிப்பிட்ட காலத்தில் இந்திரன், கஜேந்திர (யானை) வடிவம் கொண்டு இத்தலத்தில் நுழைந்த உடன் இவர்களின் சாபம் அகன்றது. இப்போதும் இவர்களை வெள்ளி பல்லி, தங்கப் பல்லிகளாக காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் காணலாம்.

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா