உறவுகள் தொடர்கதை


விதர்ப்ப தேச மன்னன் பீஷ்மகனின் மகள் ருக்மணி. இவளுக்கு ருக்மி என்பவன் உட்பட ஐந்து சகோதரர்கள். விதர்ப்ப நாட்டுக்கு வரும் பக்தர்கள், கிருஷ்ணரைப் பற்றி புகழ்ந்து பேசுவர். இதைக் கேட்கும் ருக்மிணி, கிருஷ்ணர் யாரென்று தெரியாமலேயே அவர் மீது காதல்கொண்டாள். அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தாள்.
ருக்மணியின் முடிவை அவளது அண்ணன் ருக்மி எதிர்த்தான். ஏனெனில் அவன் கிருஷ்ணருக்கு எதிரி. சகோதரியை தன் நண்பன் சிசுபாலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தான். திருமண ஏற்பாடுகள் முடிந்து விட்டன. ருக்மணி கண்ணீர் வடித்தாள்.
தன் மனதில் உள்ளதை கிருஷ்ணருக்கு எழுதி அதை அரண்மனையில் இருந்த அந்தணர் ஒருவரிடம், கொடுத்து அனுப்பினாள்.
“அன்பரே! நானாக உங்களை நாடி வந்தால் அது தவறான அபிப்ராயத்தை உருவாக்கும். எனவே நீங்கள் இங்கு வந்துள்ள சிசுபாலனை வென்று என்னைத் துாக்கிச் சென்று திருமணம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வராவிட்டால் நான் இறந்து விடுவேன். திருமணத்துக்கு முதல் நாள் அம்பிகை கோயிலுக்கு 
மணமகளை அழைத்துச் செல்வது எங்கள் நாட்டு வழக்கம். வழிபாடு முடிந்ததும் நீங்கள் என்னை கடத்தி விட வேண்டும்” என எழுதியிருந்தாள்.
கடிதத்தைப் படித்த கிருஷ்ணர், திருமணத்துக்கு முன்னதாக ருக்மணியை அழைத்துச் செல்வதாக பதில் சொல்லி அனுப்பினார்.
ருக்மணி காத்திருந்தாள். மாயக்கண்ணன் வரவேயில்லை. மறுநாள் திருமணம்... கடைசி நிமிடத்தில் மனம் தளராமல் கோயிலுக்கு புறப்பட்டாள்.
அந்நேரத்தில் கிருஷ்ணர் வந்து சேர்ந்தார். தம்பிக்கு துணையாக அண்ணன் பலராமனும் வந்திருந்தார்.
கோயிலில் வழிபாடு முடிந்ததும்,சற்றும் தாமதிக்காமல் ருக்மணியை தேரில் தூக்கி வைத்தவுடன் தேர் பறந்தது. ருக்மி கிருஷ்ணரை விரட்டினான். கடும் போர் நடந்தது. கிருஷ்ணர் ருக்மியை வெட்ட முயன்றார்.
தன் அண்ணனை விட்டு விடும்படி ருக்மணி கெஞ்சவே அவனை விடுவித்தார். இருந்தாலும் ஒரு கத்தியை எடுத்து ருக்மியின் தலை முடியை மழித்தார். 
“வீரமில்லாத உனக்கு மீசை எதற்கு?” எனக் கேட்டு ஒரு பக்க மீசையை எடுத்து விட்டார்.
இதை பலராமன் தூரத்தில் இருந்து பார்த்து “தம்பி! இது முற்றிலும் தவறு. ருக்மி உன் மனைவியின் சகோதரன். உறவினர்களை அவமானப்படுத்துவது மிகவும் தவறு. இனி இப்படி செய்யாதே” என கண்டித்தார்.
கண்ணன் தன் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் ருக்மணியை மணந்து கொண்டார்.
உறவினர்களை பிடிக்காவிட்டாலும் கூட, அவர்கள் வீடு தேடி வந்து விட்டால், அவர்களை உபசரிக்க வேண்டும் என்பதே ''ருக்மணி கல்யாணம்'' உணர்த்தும் பாடம்

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா