ஆதவனால் கிடைத்த அன்பு மகன்


கிளிமுகம் கொண்ட சுகபிரம்ம முனிவர் பூவுலகில் இருந்து வானுலகம் புறப்பட்டார். மேரு மலையை வலம் வந்து கொண்டிருந்த சூரியன் அவரைக் கண்டார். 

“சுகபிரம்மரே! பிரம்மச்சாரியான தங்களுக்கு இல்லற வாழ்வின் பெருமையோ, பிள்ளைச் செல்வத்தின் மகத்துவமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட நிலையில், வானுலகம் செல்லும் உங்களை என்னால் அனுமதிக்க முடியாது” என தடுத்தார் சூரியன்.

அவரிடம் முனிவர், “இல்லற வாழ்வில் ஈடுபட்டால் தான் மனிதன் பக்குவநிலை பெற முடியும் என்பது உண்மை தான். என்றாலும் என் போன்ற முனிவர்களுக்கு அந்த விதி பொருந்தாது. நீர்க்குமிழி போல அற்பகாலம் நீடிக்கும் சம்சார வாழ்வில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. சாதாரண மனிதனுக்குரிய விதிகளை என்னுடன் பொருத்திப் பார்க்கத் தேவையில்லை,” என்றார் சுகபிரம்மர்.

சூரியன் சுகபிரம்மரின் விளக்கம் கேட்டு சிரித்தார். “வியாசரின் மகனான தாங்களே சாஸ்திரத்தை மீறுவது முறையல்ல. முன்னோருக்குரிய பிதுர்கடன் செய்ய புதல்வன் ஒருவனைப் பெற்றுக் கொள்வது அனைவருக்கும் அவசியம். சாஸ்திரத்தை மதிப்பது தங்களின் கடமை,” என்றார் சூரியன்.

சூரியனின் பேச்சைக் கேட்ட சுகபிரம்மர் மனம் மாறினார். தவசக்தியால் புத்திரன் ஒருவனை உருவாக்கினார். அவனுக்கு 'சாயா சுகர்' என்னும் பெயர் வந்தது.

அவனிடம் சுகபிரம்மர், “தவத்தால் கிடைத்த தங்கமகனே! புனித தலமான காசியில் தங்கியிருந்து முன்னோர் கடனைச் சரிவரச் செய்து வா,” என்று வாழ்த்தி அனுப்பி விட்டு தன் பயணத்தை தொடர்ந்தார்.

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

தியாகச் சின்னம் ஊர்மிளா