யார் இந்த மாளிகைப்புறத்தம்மன்?


ஐயப்பன் சன்னிதியை அடுத்து மாளிகைப்புறத்தம்மன் எனப்படும் மஞ்சமாதா சன்னிதி உள்ளது. இவளது கதை தெரியுமா?

தத்தாத்ரேயர் என்ற மகான் சிவன், திருமால், பிரம்மா ஆகியோரின் அம்சமாக பூமியில் பிறந்தவர். அவருக்கும் மூன்று தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதியின் அம்சமான லீலா என்பவளுக்கும் திருமணம் நடந்தது. இவள் காலவ முனிவரின் மகளாக பிறந்தவள்.

லீலாவுக்கு பணம், பகட்டு, இல்லற வாழ்வு ஆகியவற்றின் மீது தீராத ஆசை. தத்தாத்ரேயரோ ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார்.

ஒருநாள் இருவருக்கும் கடும் பிரச்னை ஏற்பட்டது. ''உங்கள் மகிஷியான (மனைவி) என் கருத்தை ஏற்க மறுக்கிறீர்களே!'' என லீலா கோபத்துடன் சொன்னாள்.

உடனே தத்தர், ''உன்னை நீயே மகிஷி என்று சொல்லிக் கொண்டதால், நீ மகிஷியாகவே (எருமைத்தலை கொண்டவள்) பிறப்பாய். கோபம், காமம் ஆகிய குணங்களைக் கொண்ட நீ அரக்கியாகத் திரிவாய்,'' என சாபமிட்டார். பதிலுக்கு லீலா, ''நான் எருமையாகப் பிறந்தால், நீங்களும் அப்படித்தான் பிறப்பீர்கள்,'' என்றாள்.

சாபத்தின் பலனாக அவள் கரம்பன் என்பவளின் மகளாகவும், மகிஷாசுரன் என்பவனின் தங்கையாகவும் பிறந்தாள். அவளுக்கு கரம்பிகை என்று பெயரிடப்பட்டது. எருமைத்தலையுடன் அவள் இருந்ததால், மகிஷி என்ற காரணப்பெயர் ஏற்பட்டது. தத்தாத்ரேயரும் எருமையாக உருமாறி மகிஷியுடன் திரிந்தார். 

இதனிடையே தன் அண்ணன் மகிஷாசுரனை தேவர்கள் பார்வதிதேவியின் (மகிஷாசுரமர்த்தினி) தயவுடன் கொன்று விட்டனர் என்பதை அறிந்த மகிஷி, அவர்களைப் பழி வாங்க திட்டமிட்டாள். சிவனை நோக்கி தவமிருந்து, ஒரு ஆணுக்கும், ஆணுக்கும் பிறக்கும் பிள்ளை கையாலேயே தனக்கு அழிவு வர வேண்டும் என்று வரம் பெற்றாள். அதன்படி சிவ - விஷ்ணு சேர்க்கையில் சாஸ்தா பிறந்தார். அவர் மகிஷியுடன் போர் செய்து அவளைத் தோற்கடித்தார். 
பாலகன் ஒருவன் தன்னைத் தோற்கடித்ததும், அவன் ஒரு தெய்வப்பிறவி என்பதைப் புரிந்து கொண்ட மகிஷி, அவரைப் பணிந்து தனக்கு மோட்சம் அருள வேண்டினாள். ஐயப்பன் அவளிடம், ''நீ மூன்று தேவியரின் அம்சமாகப் பிறந்தாலும், தர்ம நியாயத்தை மறந்தாய். கணவன் சொல் மீறினாய். இருப்பினும் உனக்கு சாப விமோசனம் அளிக்கிறேன். நீ மீண்டும் அழகிய பெண் வடிவம் பெறுவாய்,'' என்றார். 

அவளும் பழைய லீலாவாக உருப்பெற்றாள். இருப்பினும் உலக வாழ்வின் மீதான இச்சை அவளுக்கு அடங்கவில்லை. 

''ஐயனே! எனக்கு விமோசனம் தந்த நீங்களே என்னை மணக்க வேண்டும்,'' என்று வேண்டுகோள் வைத்தாள்.

சாஸ்தா அவளிடம், ''பெண்ணே! இந்த இடத்தில் நான் குடியிருக்கப் போகிறேன். என்னை தரிசிக்க முதன் முதலாக மாலை அணிந்து வரும் பக்தன் (கன்னி சுவாமி) எந்த நாளில் இங்கு வரவில்லையோ, அன்று உன்னை மணந்து கொள்கிறேன்,'' என வாக்களித்தார். அத்துடன் தன் சன்னிதி அருகில் மஞ்சமாதா என்ற பெயரில் கோவில் கொள்ளவும் அனுமதி கொடுத்தார். அதன்படி மஞ்சமாதா, மாளிகைப்புறத்தம்மன் என்ற பெயர்களைத் தாங்கி அருள் செய்து வருகிறாள்.

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா