நவராத்திரி சுபராத்திரி


ஒருமுறை ராமனை சந்தித்த நாரதர் “ராமா! நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தே சிவபெருமான் திரிபுரங்கள் எனப்படும் அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தார். மது கைடபர் என்னும் அசுரர்களை திருமால் கொன்றழித்தார். இந்திரன் விருத்திராசுரனை வென்றான். பிருகு முதலிய முனிவர்களும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து பேறு பெற்றனர்,” என்றார்.
அந்த சமயத்தில் சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்ட துக்கத்தில் இருந்தார் ராமபிரான். நவராத்திரி விரதத்தால் ராவணனை வெல்வதற்குரிய ஊக்கத்தையும், முயற்சிகளையும் பெறலாம் என்பதால் நாரதரிடம், அதைப்பற்றி கேட்டார் ராமபிரான்.

“என்றும் எங்கும் நிலையாக இருப்பவள் ஆதிசசக்தி. உலக அன்னையாகிய சக்தி மக்களின் துன்பங்களை நொடியில் போக்கும் சக்தி உடையவள். நானே உனக்கு ஆசானாக இருந்து, தேவி விரதம் பூர்த்தியாகும்படி செய்கிறேன். 

உன்னுடைய வெற்றி, மாற்றான் மனைவி மீது ஆசைப்படுபவர்களுக்கு அழிவு உறுதி என்ற பாடத்தை உலகத்திற்கு தரும்,” என்று ஆசிர்வதித்தார்.

உடனடியாக, ராமன் தான் தங்கியிருந்த இடத்தில் பீடம் ஒன்றை நிறுவினார். தேவியை ஸ்தாபித்து ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொண்டார். அஷ்டமி தினத்தில் நடுநிசி இரவில் தேவி சிங்க வாகனத்தில் ராமனுக்கு தரிசனம் தந்து, “ராமா! நீ செய்த பூஜையால் உள்ளம் மகிழ்ந்தேன். உனக்கு வேண்டிய வரங்களை கொடுக்கிறேன்,” என்று அருள் செய்தாள்.

சீதையைப் பிரிந்தது பற்றி, அவர் எடுத்துரைத்தார். உடனே ராமபிரானுக்கு அவர் கடவுளின் அம்சம் என்பதை நினைவுபடுத்தினாள் தேவி.

“ராமா! கலங்காதே! நீயே மச்சமாக (மீன்) அவதரித்து வேதங்களை மீட்டாய். ஆமையாய் வந்து மந்திர மலையைத் தாங்கி, தேவர்களுக்கு அமுதளித்தாய். பன்றி உருவம் தாங்கி, கோரப்பல்லால் பூமியைக் காத்தருளினாய். நரசிங்கமாக அவதரித்து இரணியனைக் கொன்றாய். குள்ள வாமனனாக வந்து மகாபலியின் செருக்கைப் போக்கினாய். பரசுராமனாக வந்தவனும் நீ தான். இப்போது தசரத சக்கரவர்த்திக்கு மகனாகப் பிறந்துள்ளாய். ராவணனைக் கொன்று சீதையை மீட்கும் சக்தியை உனக்கு தருகிறேன்” என்றாள்.

விஷ்ணுவின் அம்சம் ராமன் என்பதை தேவி ஞாபகப்படுத்தியது போல், வானரக்கூட்டங்கள் தேவர்களுடைய அம்சம் என்பதையும், லட்சுமணன் ஆதிசேஷனின் அம்சம் என்பதையும் நினைவூட்டினாள்.ராவண சம்ஹாரத்திற்குப் பிறகு, இந்த ராஜ்யத்தை பத்தாயிரம் ஆண்டுகள் அரசாள்வாய் என்று அருள் செய்தாள்.

பின்னர் ராமன், “முனிசிரேஷ்டரே! தேவி விரதத்தை நல்ல முறையில் செய்ய உதவிய உமக்கு குருதட்சணையாகக் கொடுக்க என்னிடம் பொருள் ஏதும் இல்லை” என்று நாரதரைப் பணிந்து வருந்தினார்.

நாரதர் சிரித்துக் கொண்டே,“ராமா! நீ தரும் தட்சணையை விட உன் அன்பே எனக்கு மிக விருப்பமானது. உனக்கு வெற்றியும் மங்களமும் உண்டாகும்போது, அவை உலகத்திற்கே உரித்தானதாக அமையும். அந்த குறைவற்ற சசல்வத்தில் எனக்கும் பங்குண்டு என்பதில் மகிழ்ச்சி.” என ராமனுக்கு ஆசி தந்தார்.

விரதம் முடித்த ராமன், யுத்தத்தில் வென்று சீதையை மீட்டார். நவராத்திரி விரதம் சுபம் தந்தது.

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா